அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும்
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளபோது தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதியான ரேஷன் கார்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கையின் மூலம் தமிழகத்தின் நிதி நிலை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது முழு பட்ஜெட் அல்ல. அரையாண்டு பட்ஜெட்தான்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை முழுமனதாக வரவேற்கிறேன். யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம். இந்த திட்டம் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும். இந்த திட்டத்தில் ஏற்கெனவே பணியில் இருக்கும் யாரையும் பணியில் இருந்து நீக்கவில்லை.

காப்பீட்டு கழகங்களை தனியார் மயமாக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனை காங்கிரஸ் மக்களவையில் எதிர்த்த நிலையில் அறுதி பெரும்பான்மையை பயன்படுத்தி அந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

மாநிலங்கள் அவையில் பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலைக்குழுவுக்கு அனுப்ப கேட்டுக் கொண்டனர். பா.ஜனதாவை ஆதரிக்கும் பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட இதனை எதிர்த்தன. இருப்பினும் அரசு இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்களித்து காப்பீட்டுக் கழகங்களை தனியார் மயமாக்க ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்சல்வம் ஆகியோர் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. எந்த காரணத்துக்காக அந்த மசோதாவை ஆதரித்து அ.தி.மு.க. வாக்களித்தது என்பதை அவர்கள் விளக்க வேண்டும். அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் இதனை ஆதரிக்கின்றனவா? இதற்கு அ.தி.முக. விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், நகர தலைவர் ராமானுஜம், வட்டார தலைவர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com