நவீன வசதிகள் மூலம் போலீஸ் துறை பலப்படுத்தப்படும்; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா

நவீன வசதிகள் மூலம் போலீஸ் துறை பலப்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
நவீன வசதிகள் மூலம் போலீஸ் துறை பலப்படுத்தப்படும்; கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
Published on

போலீசாருக்கு படிகள்

கர்நாடக அரசின் போலீஸ் துறை சார்பில் போலீஸ் அதிகாரிகள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

போலீசாரின் மன தைரியத்தை அதிகரித்து நேர்மையாக பணியாற்ற போலீசாருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மாநில அரசால் அமல்படுத்தப்படுகின்றன. கர்நாடகத்தில் போலீசாருக்காக 9,820 வீடுகள்

கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. போலீசாருக்கு பல்வேறு படிகள் வழங்கப்பட்டு வருகின்றன. போலீஸ் துறையில் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் போலீசாரின் நலனில் மாநில அரசு காட்டும் அக்கறையை வெளிக்காட்டுகிறது.

சைபர் குற்றங்கள்

பெங்களூருவில் தடய அறிவியல் ஆய்வகம் அமைத்தது, தாவணகெரேயில் போலீஸ் பப்ளிக் பள்ளி திறந்தது உள்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பிரச்சினையில் சிக்கும் பெண்களுக்கு உதவ நிர்பயா திட்டத்தின் கீழ் 700 இரு சக்கர வாகனங்கள் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் சைபர் பொருளாதார மற்றும் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நிலையங்கள், புதிய போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

குற்றங்களை தடுப்பது, குற்றங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பது போன்ற பணிகளில் போலீசார் ஈடுபட வேண்டும். சைபர் குற்றங்கள், பொருளாதார குற்றங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களை போலீசார் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.

தொழில்நுட்ப வசதிகள்

புதிய தொழில்நுட்பங்கள் வரவால் குற்றங்களின் வடிவமும் மாறி வருகிறது. இத்தகைய குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் நவீன வசதிகள் மூலம் போலீஸ் துறை பலப்படுத்தப்படும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேசுகையில், "கர்நாடக போலீஸ் துறை நேர்மையாக செயல்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலையிலும் போலீசார் கடமை உணர்வுடன் நேர்மையாக பணியாற்ற தவறுவது இல்லை. வரும் காலத்திலும் போலீசார் இவ்வாறே பணியாற்ற வேண்டும். புதிய சவால்களை எதிர்கொள்ள வசதியாக போலீஸ் துறையை பலப்படுத்த வேண்டியது அவசியம். போலீசாருக்கு பயிற்சி, தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது அவசியம். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு அதிகளவில்

போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி-கல்லூரிகள் அருகே போதைப்பொருள் நடமாட்டத்தை போலீசார் தடுக்க வேண்டும்" என்றார்.

இந்த மாநாட்டில் தலைமை செயலாளர் ரவிக்குமார், கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல், மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com