கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு, நினைவு ஸ்தூபி உடைப்பு மர்ம கும்பலை போலீஸ் தேடுகிறது

திருவனந்தபுரத்தில் பா.ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்ட எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மார்த்தாண்டம்அருகே மேல்புறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது நள்ளிரவில் கல்வீசப்பட்டது. நினைவு ஸ்தூபியும் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு, நினைவு ஸ்தூபி உடைப்பு மர்ம கும்பலை போலீஸ் தேடுகிறது
Published on

களியக்காவிளை,

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்த 2 வாலிபர்கள் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பின்னணி என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்றுமுன்தினம் இரவு கேரளாவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. திருவனந்தபுரத்தில் உள்ள பா. ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் அலுவலக முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான பா.ஜனதா கட்சி தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

பஸ் போக்குவரத்து நிறுத்தம்

இதன்காரணமாக திருவனந்தபுரத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தால் நேற்று முன்தினம் இரவு முதல் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக பஸ்கள் அனைத்தும் களியக்காவிளை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

கல்வீச்சு ஸ்தூபி உடைப்பு

இதற்கிடையே நேற்று அதிகாலை குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

இது போல் செம்மங்காலை சந்திப்பில் இருந்த கம்யூனிஸ்டு தியாகிகள் நினைவு ஸ்தூபியை நள்ளிரவில் மர்ம கும்பல் அடித்து உடைத்தது. அப்போது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். பொதுமக்கள் வருவதைகண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

உடனே அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். அருமனை போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை விரைவில் பிடிப்பதாக கூறினார்.

மேல்புறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடிவருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை மேல்புறம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com