கொள்ளிடம் அணை சீரமைக்க கோரி ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்

கொள்ளிடம் அணை உடைந்த பகுதியை ராணுவம் மூலம் சீரமைக்க கோரி திருச்சியில் இருந்து முக்கொம்பிற்கு ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளிடம் அணை சீரமைக்க கோரி ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்
Published on

மலைக்கோட்டை,

முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த மாதம் 9 மதகுகள் உடைந்தன. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பணிகள் முழுமை பெறாததால் ராணுவத்தின் உதவி மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மீண்டும் வெள்ளம் வந்தால் அதை தாங்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையில் இருந்து முக்கொம்பு வரை ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து போராட்டம் நடத்துவதற்காக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் சிந்தாமணி அண்ணாசிலை முன்பு நேற்று காலை திரண்டனர். கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

அதன்பின் விவசாயிகள் ஊர்வலமாக முக்கொம்பிற்கு புறப்பட்டு செல்ல தயாராகினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தி ஊர்வலமாக செல்ல தடை விதித்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊர்வலமாக நடந்து சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரித்தனர். வாகனங்கள் புறப்பட்டு செல்ல தடை இல்லை என போலீசார் கூறினர். இதைதொடர்ந்து விவசாயிகள் சரக்கு ஆட்டோக்களில் முக்கொம்புக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு முக்கொம்பு சுற்றுலா மையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விவசாயிகள் ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com