திருச்சி அருகே ராம்ஜிநகரில் குளம் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் அவதி

மணிகண்டம் அருகே ராம்ஜிநகரில் குளம் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்ததால் தண்ணீர் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருச்சி அருகே ராம்ஜிநகரில் குளம் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் அவதி
Published on

மணிகண்டம்,

மணிகண்டம் ஒன்றியம் ராம்ஜிநகரிலிருந்து புங்கனூர் செல்லும் சாலையையொட்டி மலையப்பட்டி குளம் உள்ளது. விவசாய பணிகளுக்காக கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து இந்த குளத்திற்கு காவிரி தண்ணீர் வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை அந்த குளம் நிரம்பியது. இதனால் உபரிநீர் கலிங்கி வழியாக வெளியேறியது. உபரிநீர் செல்லும் வடிகால் வாய்க்கால் பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததால் தண்ணீர் தனது பாதையை மாற்றியது.

வாய்க்காலில் தண்ணீர் செல்லமுடியாமல் அங்குள்ள ஹரிபாஸ்கர் காலனி குடியிருப்பு பகுதியை தண்ணீர் சூழ்ந்தது. பின்னர் அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் தங்களது வீட்டு மாடிகளிலும், சிலர் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து கள்ளிக்குடி ஊராட்சி தலைவர் சுந்தரம் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த வடிகால் வாய்க்கால்களை சீரமைத்தனர். அப்போது அங்கு வந்த வருவாய் துறையினரிடம் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அந்த குளத்திற்கு வந்துகொண்டிருந்த தண்ணீரை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று மதியத்திற்கு பிறகு அங்குள்ள வீடுகளில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று வீட்டினுள்ளே தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் சகதியை அப்புறப்படுத்தினர். இதனால் நேற்று ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனி பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com