பிரேத பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் வழங்குவோம் என அதிகாரிகள் ‘கறார்’ புயல் நிவாரண தொகைக்காக போராடும் ஏழை குடும்பம்

வேதாரண்யம் அருகே புயல் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஏழை விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார். நிவாரண தொகை வழங்கக்கோரி அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் வழங்குவோம் என அதிகாரிகள் ‘கறார்’ புயல் நிவாரண தொகைக்காக போராடும் ஏழை குடும்பம்
Published on

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே புயல் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஏழை விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார். நிவாரண தொகை வழங்கக்கோரி அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவருடைய உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை தந்தால்தான் நிவாரண தொகை வழங்க முடியும் என அதிகாரிகள் கறாராக கூறியது கிராம மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

தமிழகத்தின் எழில் மிகு பகுதிகளில் நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யமும் ஒன்று. கடலோர பகுதியான வேதாரண்யத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயம், மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி ஆகிய தொழில்கள் இங்கு பிரதானமாக உள்ளன.

தண்ணீர் பற்றாக்குறை, இலங்கை கடற்படையின் அத்துமீறிய தாக்குதல், ரெயில் போக்குவரத்து இல்லாமை உள்ளிட்டவை வேதாரண்யம் பகுதி மக்களை ஆண்டாண்டு காலமாக அவதிப்படுத்தி வருகிறது.

வேதாரண்யம் மக்களை அவதிப்படுத்தும் காரணிகளின் பட்டியலில் கடைசியாக இடம் பிடித்தது, கடந்த ஆண்டு(2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி நள்ளிரவு வேதாரண்யத்தில் கரையை கடந்தது கஜா புயல். விவசாயிகள், மீனவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டது இந்த புயல்.

வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் இந்த பகுதி மக்களிடம், நாம் எப்போது கரை சேரப்போகிறோம்? என்ற கலக்கம் தற்போது வரையில் உள்ளது. இருந்ததையெல்லாம் இழந்தவர்கள் அரசிடம், நிவாரணத்துக்காக கையேந்தி நிற்கிறார்கள்.

இதில் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தி கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயி ராமசாமி(வயது70) என்பவரின் குடும்பமும் ஒன்று. ராமசாமியின் மனைவி மீனாட்சி. மகள் பாலசுந்தரி. இவருக்கு தாமரைக்கண்ணன் என்பவருடன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

ராமசாமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி நள்ளிரவு தனது கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது புயலுடன் பெய்த பேய் மழையின் தாக்கம் காரணமாக கூரை வீடு இடிந்து விழுந்ததில் ராமசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

புயலின் கோர தாண்டவத்தால் மின்கம்பங்களும், மரங்களும் முறிந்து சாலையின் குறுக்கும், நெடுக்குமாக கிடந்ததால், பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தி கிராமம் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், ராமசாமியின் மரணம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க முடியாத நிலை அந்த கிராம மக்களுக்கும், உறவினர்களுக்கும் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் நிர்க்கதியாக நின்றவர்களுக்கு ராமசாமியின் உடலை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்வதற்கு கூட வாகன வசதி கிடைக்கவில்லை. நேரம் ஆக, ஆக உடலில் துர்நாற்றம் வீச தொடங்கியதால் கிராம மக்கள் ராமசாமிக்கு இறுதி சடங்குகளை செய்து தகனம் செய்து விட்டனர்.

பின்னர் அவருடைய இறப்பு குறித்து கிராம நிர்வாக அதிகாரி அய்யப்பன் அளித்த பரிந்துரையின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் புயலில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பலருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. ஆனால் ராமசாமியின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை.

அவருடைய குடும்பத்தினர் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவனிடம், நிவாரண தொகை கேட்டு மனு கொடுத்தனர். ஆனால் தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், பிரேத பரிசோதனை அறிக்கை இல்லாமல் நிவாரண தொகை வழங்க இயலாது என கூறி விட்டனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை தந்தால்தான் நிவாரண தொகை வழங்கப்படும். எனவே பிரேத பரிசோதனை அறிக்கையை தாருங்கள் என அதிகாரிகள் கேட்டது ராமசாமியின் குடும்பத்தினரையும், கிராமத்தினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ராமசாமியின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கக்கோரி போராட்டம் நடத்த போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கிராம மக்கள் அறிவித்தனர். இதுதொடர்பான துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டன.

இதை அறிந்த தாசில்தார் இளங்கோவன், போராட்டம் அறிவித்தவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை இல்லாமல் நிவாரண தொகை வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும், புயல் காரணமாக உயிரிழந்த ராமசாமியின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கான பரிந்துரை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தாசில்தார் கூறினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் நிவாரண தொகை வழங்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ராமசாமியின் மகள் பாலசுந்தரி, நிவாரண தொகை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராமசாமியின் உடல் எரியூட்டப்பட்டதற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களை வைத்து உள்ளதாக ராமசாமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் ஊரே சாட்சியாக உள்ளது. ஆனாலும் பிரேத பரிசோதனை இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நிவாரணத்தொகை வழங்க மறுக்கலாமா? உடல் எரியூட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை எப்படி தர முடியும்? என்ற மக்களின் கேள்விக்கு விடையில்லை.

துயரத்துக்கு ஆளாகி இருக்கும் குடும்பத்துக்கு உதவ தேவை சட்டமா? கருணையா? என்பதை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com