தமிழில் தந்தி அனுப்புவதை கண்டுபிடித்த தபால் அதிகாரி உடல், திருச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம்

தமிழில் தந்தி அனுப்புவதை கண்டுபிடித்த தபால் அதிகாரி உடல் திருச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
தமிழில் தந்தி அனுப்புவதை கண்டுபிடித்த தபால் அதிகாரி உடல், திருச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம்
Published on

திருச்சி,

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள சேஷாயி நகரை சேர்ந்தவர் புலவர் சிவலிங்கம். 1944-ம் ஆண்டு தபால் துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்த இவர், பின்னர் தபால் நிலைய அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தந்தி அனுப்பும் முறை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது.

மோர்ஸ் கோடு பயன்படுத்தி ஒவ்வொரு குறியீடுக்கும் ஒரு ஆங்கில வார்த்தை அச்சிடப்பட்டு தந்தி அனுப்பப்பட்டு வந்தது. கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு ஆங்கில வார்த்தையில் வரும் தகவல்களை புரிந்து கொள்வது கடினம் என்பதால், இவர் கடந்த 1955-ம் ஆண்டு தமிழில் தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்தார். இதற்காக அவருக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கப்பட்டன.

பணி ஓய்வுக்கு பின்னர் திருக்குறளுக்கு விளக்கம் உள்பட பல புத்தகங்களை எழுதி உள்ள புலவர் சிவலிங்கம், வயது முதிர்வின் காரணமாக தனது 94 வயதில் நேற்று மரணம் அடைந்தார். இவருடைய மனைவி சரஸ்வதி கடந்த 2002-ம் ஆண்டு இறந்து விட்டார். சிவலிங்கத்திற்கு தமிழ்செல்வன், மோர்ஸ் என்ற மகன்களும், மனோன்மணி என்ற மகளும் உள்ளனர். இறந்த பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்காக தானமாக வழங்க வேண்டும் என்று சிவலிங்கம் உறுதி அளித்து இருந்தார். அதன்படி நேற்று திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரிக்கு சிவலிங்கத்தின் உடல் தானமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com