போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.
போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
Published on

அருமனை,

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

மோட்டார் சைக்கிள் திருட்டு

மார்த்தாண்டம் பகுதியை சர்ந்தவர் ஷானு. இவர் சம்பவத்தன்று அருமனை அருகே உள்ள அம்பலகாலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். பின்னர் திரும்ப வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பாலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை தேடி வந்தனர். மேலும், அந்த வாலிபரின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

பொதுமக்கள் பிடித்தனர்

இந்தநிலையில், நேற்று மோட்டார் சைக்கிளை திருடிய நபர் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து அருமனை போலீசார் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த பிரஜித் (வயது35) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தப்பி ஓட்டம்

பொதுமக்கள் தாக்கியதால் பிரஜித்துக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக போலீசார் நேற்று இரவு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த போது போலீசாரின் கவனத்தை திசைத்திருப்பி பிரஜித் நைசாக தப்பி ஓடினார். போலீசார் அவரை ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தேடினர். ஆனால், இரவு நேரம் என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com