

குளித்தலை,
குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது வாளாந்தூர். இந்த ஊரில் ஊர் மக்கள் ஒன்று கூடி கோவில் கட்டுவது தொடர்பாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வாளாந்தூரில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள கோவில் இடிந்துபோன நிலையில் உள்ள காரணத்தால் 30 ஆண்டுகளாக இதுவரை எங்கள் ஊரில் திருவிழா எதுவும் நடத்தமுடியாத சூழ்நிலை உள்ளது. கோவிலை புதுப்பிக்க முற்படும்போது சிலரால் இப்பணி தடுத்து நிறுத்தப்படுகிறது. அனைவரும் ஒன்று கூடி கோவிலை கட்டவேண்டுமென்று நினைத்தால் சிலரால் மிரட்டப்படுகின்றோம். இதனால் இப்பகுதி மக்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. கோவில் திருவிழா மற்றும் தெய்வ வழிபாடு நடக்காமல் இருப்பதால், மக்களுக்கு தெய்வகுறைபாடு ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அனைவரும் பயந்து வாழ்ந்து வருகின்றனர்.
நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒருமனதாக கோவில் கட்ட முற்பட்டோம். சாமி பார்க்க பூசாரி ஒருவரை அழைத்து வந்தபோது எங்கள் ஊரில் (வாளாந்தூரில்) வசித்துவரும் ஒருவர் பூசாரியை அடித்து தடுத்துவிட்டார். இதனால் எங்கள் பகுதி மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இதனால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி கோவில் கட்ட அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் கலியமூர்த்தி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாளாந்தூருக்கு நேரில் வந்து பார்வையிட்டு, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.