விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பெருமாநல்லூர் அருகே விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
Published on

பெருமாநல்லூர்,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய அந்த பகுதி போலீஸ் நிலையங்களில் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்க இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் முன் அனுமதி பெற்று விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகர் பகுதியில் விநாயகர் சிலை அமைக்க இந்து முன்னணி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக அந்த பகுதியில் ஷெட் ஒன்று போட்டனர். மேலும் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்ய விநாயகர் சிலையை அங்கு கொண்டு வந்தனர். ஆனால் அந்த பகுதியில் விநாயகர் சிலை வைக்க போலீசாரிடம் அனுமதிபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த பகுதியில் விநாயகர் சிலை வைக்க அனுமதி பெறவில்லை என்றும், எனவே சிலை வைக்க கூடாதுஎன்றும் கூறினார்கள். இதையடுத்து போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் கூறுவதை பொதுமக்கள் கேட்க மறுத்து விட்டதோடு, இங்கு சிலை வைக்கஅனுமதிக்கவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். இதையடுத்து கணக்கம்பாளைம்-வாவிபாளையம் பகுதிக்கு திரண்டு சென்று சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன், மாடசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் மற்றும் சித்ரா தேவி ஆகியோர் சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்களிடமும், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட துணைத்தலைவர் குறிஞ்சி சேகர், ஒன்றிய தலைவர் விஸ்வநாதன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையில் ஒரு தரப்பினர் அந்த பகுதியில் விநாயகர் சிலையைவைத்து பூஜை செய்ய தொடங்கினர். மேலும் இந்த சிலையில் எந்த பிரச்சினையும் வராது என்று இந்து முன்னணி நிர்வாகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பூஜைகள் தொடர்ந்தது.

இந்த பூஜையில் ஒன்றிய பொதுச்செயலாளர் சிவா, செயலாளர் சபரிநாதன், துணை தலைவர் முருகேஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகேஷ், பாலாஜி நகர் கிளை செயலாளர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com