சிவகாசியில் நடைபாதையில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் பொதுமக்கள் அவதி

சிவகாசி நகராட்சி 2-வது வார்டில் நடைபாதையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகாசியில் நடைபாதையில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் பொதுமக்கள் அவதி
Published on

சிவகாசி,

சிவகாசி நகராட்சியில் பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் இருப்பதால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலை தொடர்கிறது. அய்யப்பன் காலனி பகுதியில் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பெரியகுளம் கண்மாயை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பகுதியில்தான் தற்போது பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

நகரில் சேரும் குப்பைகளை அகற்ற போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை குப்பைகளை அகற்றினால் பெரிய விஷயம் என்ற நிலை பல மாதங்களாக தொடர்கிறது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இங்கு கமிஷனர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியே விருதுநகர் நகராட்சி நிர்வாகத்தையும் சேர்த்து பார்ப்பதால் சிவகாசி நகராட்சி வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

இதனால் முறையாக நடக்க வேண்டிய பல பணிகள் முறை தவறி நடக்கிறது. குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் பொது இடங்களில் கொட்ட கூடாது என்று இதற்கு முன்பு இருந்த அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்து வந்தனர். ஆனால் தற்போது அதுபோன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் பெயரளவுக்கு கூட அதிகாரிகள் எடுப்பதில்லை.

சிவகாசி நகராட்சி 21-வது மற்றும் 2-வது வார்டு சேரும் இடத்தில் டாக்டர் சந்திரகிரகம் ஆஸ்பத்திரி ரோடு உள்ளது. இந்த ரோட்டில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வந்தனர். இந்த ரோட்டில் இருந்து 2-வது வார்டு பகுதியில் உள்ள அண்ணா காலனிக்கு செல்ல குறைந்த நேரமே ஆவதால் பொதுமக்கள் பலர் இந்த ரோட்டை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இந்த ரோட்டை சுத்தப்படுத்தவும், கண்காணிக்கவும் நகராட்சி நிர்வாகம் எப்போதுமே முன்வந்தது இல்லை. இதனால் இந்த ரோட்டில் குப்பைகளும், கட்டிட கழிவுகளும் மலைபோல் குவிந்து கிடக்கிறது. பல நேரங்களில் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கும் நிலை தொடர்கிறது. குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த பகுதியை நகராட்சி அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ள வில்லை என்று புரியவில்லை. பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கட்டிட கழிவுகளை அகற்றவும், குப்பைகளை அகற்றவும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com