திருச்சி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தி வைப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். நிலைமையை சரி செய்திட அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
Published on

திருச்சி,

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கடந்த ஆண்டு(2017) ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது. பழைய ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் தங்களது குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் கார்டு ஜெராக்ஸ் சமர்ப்பித்து ஸ்மார்ட் கார்டுக்கு பதிவு செய்யும் முறை வந்தது. புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம், கடை மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் போன்ற காரணங்களுக்காக வட்ட வழங்கல் அலுவலகம் வரத்தேவை இல்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பொது இ-சேவை மையங்களிலேயே பதிவு செய்து நகல் பெற வசதி செய்யப்பட்டது. இ-சேவை மையங்கள் மூலமாகவே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.

ஆனாலும், இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. அதாவது, ஸ்மார்ட் கார்டின் விண்ணப்பித்தவரின் புகைப்படத்துக்கு பதிலாக நடிகர், நடிகையின் படம், செருப்பு, ஆண் பெயருக்கு பெண் படம், சுவாமி படங்கள் என ஸ்மார்ட் கார்டில் பல குளறுபடிகள் நடந்தன. இதுபோன்ற குளறுபடி காரணமாக பலர் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லாமலேயே இருக்கிறார்கள். இப்படி தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலமாகவும், பொது வினியோகத்துறை மூலமாகவும் வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதே வேளையில், ஸ்மார்ட் கார்டு பெறாதவர்களுக்கு ரேஷனில் பொருட்கள் கிடையாது என்ற அரசின் அறிவிப்பும் மக்களை எரிச்சலடைய செய்தது. அதாவது பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு பொது வினியோகத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு இ-சேவை மையம் மற்றும் பொதுவினியோகத்துறை மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவது அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் உள்ள குளறுபடியே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இதனால், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, அரசின் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்திலும் புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படாததால் தவிப்புக்குள்ளாகி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 230 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தொட்டியம், துறையூர், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய 10 வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் ரேஷன் கார்டுகள் பதிவு பெற்றுள்ளன.

இந்த 10 வட்ட வழங்கல் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன் எண் மாற்றம் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. அரசின் முடிவால் அதிகாரிகளும் என்ன செய்வதென்று புரியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் ஏற்பட்ட சில குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய கார்டு கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் பணி நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்கள் அதை விசாரித்து ஆவன செய்து வருகிறார்கள். இருப்பினும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டு பணியை மீண்டும் தொடர்ந்தால் மட்டுமே நிலைமையை சரி செய்திட முடியும். எனவே, புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க அரசின் கவனத்துக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். புதிதாக முகவரி மாற்றம் செய்பவர்கள், ஏற்கனவே உள்ள பழைய ஸ்மார்ட் கார்டு மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் பொருட்கள் பெற முடியாது. ஏனென்றால், ரேஷன் கடைகளில் ஸ்வைப் மிஷினில் ஸ்மார்ட் கார்டை தேய்த்தால் மட்டுமே பதிவாகக்கூடிய வசதி உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com