

அந்தியூர்,
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் 33 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இங்குள்ளவர்களுக்கு ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கோ சிகிச்சைக்கு கொண்டு செல்லவேண்டும். இதற்காக பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி உள்ளது. ஆனால் பர்கூர் மலைப்பகுதியில் தொலைதொடர்பு முறையாக இயங்காததால் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த முடியாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகளால் இங்குள்ள மலைவாழ் மக்கள் தாக்கப்பட்டு காயம் அடைவது உண்டு. அவ்வாறு காயம் அடைபவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்க ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் மலைப்பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டால் காயம் அடைந்தவர்களை கொண்டு செல்லவும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக பர்கூர் மலைப்பகுதியில் தொலைத் தாடர்பு சேவை முறையாக இயங்கவில்லை.
இதன்காரணமாக ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் முதியவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கூட சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடிவதில்லை. தொட்டில் கட்டி கொண்டுபோக வேண்டிய நிலை உள்ளது.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே தொலைத்தொடர்பு சேவையை முறையாக இயங்க வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.