பொன்னமராவதி கலவரம் தொடர்பான வழக்குகளை திரும்ப பெறக்கோரி பொதுமக்கள் மனு கலெக்டரிடம் கொடுத்தனர்

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொன்னமராவதி கலவரம் மற்றும் சாலை மறியல் தொடர்பாக ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறக்கோரி, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பொன்னமராவதி கலவரம் தொடர்பான வழக்குகளை திரும்ப பெறக்கோரி பொதுமக்கள் மனு கலெக்டரிடம் கொடுத்தனர்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்களிடம் இருந்து விலையில்லா வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 350 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 300 மதிப்பிலான அதிரும் மடக்கு ஊன்றுகோல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மன்னர் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருவள்ளுவர் நகர் பகுதியில் இருப்பதற்கு மனைகளை ஒதுக்கி, மருப்பிணி ரோட்டில் சுடுகாடு மற்றும் ஒரு ஊரணி, அங்கு செல்வதற்கான பாதை வழங்கப்பட்டது. அந்த சுடுகாட்டை சுத்தம் செய்து, சுற்றுச்சுவர் மற்றும் கதவு அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (மக்கள் விடுதலை) கட்சியின் செய்தி தொடர்பாளர் விடுதலைக்குமரன், மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வாட்ஸ் அப்பில் ஒரு சமூகத்தை பற்றி அவதூறு தகவல் பரவியதை தொடர்ந்து பொன்னமராவதியில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கலவரத்தின் போது, பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக பொன்னமராவதி போலீசார் ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த 22 பேரை கைது செய்து உள்ளனர். எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து கைது செய்யும் போக்கை கைவிட, போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் பொன்னமராவதி கலவரம் மற்றும் சாலை மறியல் தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முத்தரையர் சமூக மக்கள் மீது போடப்பட்ட வழங்குகளை திரும்பப்பெற வேண்டும். தமிழகம் முழுவதும் போடப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.

திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ள 3 சிறிய மின்மோட்டாருடன் கூடிய கிணறுகளின் மின் மோட்டார்கள், ஒரு ஆழ்குழாய் கிணறு மோட்டார் ஆகியவை பழுதடைந்து உள்ளன. இதனால் ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் தண்ணீர் மட்டும் வினியோகம் செய்யப்படுவதால், எங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்த மின்மோட்டார்கள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் புதிதாக ஒரு ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராம மக்கள் வறுமையில் உள்ளனர். எங்கள் பகுதியில் தொழிற்சாலையோ, வேறு எந்த வேலைவாய்ப்புகளோ இல்லை. மேலும் எங்கள் பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணிகளும் நடைபெறவில்லை. எனவே எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, எங்கள் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான 150 நாள் வேலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

அவர்கள் கொடுத்த மற்றோரு மனுவில், புதுக்கோட்டையில் இருந்து வாராப்பூர் வரை மாலை 6 மணிக்கு முறையாக இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தற்போது வடவாளம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மீண்டும் புதுக்கோட்டை-வாராப்பூர் வரை டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com