டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

வந்தவாசி,

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் கடந்தசில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா நெற்குணம் மதுரா வயலாமூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.

பொதுமக்களுக்கும், விவசாயத்துக்கும் இடையூறாக இருந்த அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நெற்குணம் ஊராட்சி சார்பாக கடந்த ஒரு ஆண்டாக பலமுறை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டும், அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படாமல் உள்ளது.

நெற்குணம் ஊராட்சி மன்ற தலைவர் எமராஜ் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் முனியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட நெற்குணம் மற்றும் வயலாமூர் கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 125 பேர் நேற்று காலை 10 மணியளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அருகே வந்து, சிறிது தூரத்தில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் (பொறுப்பு) கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு, தெள்ளார் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சாலை மறியலை கைவிடவில்லை. டாஸ்மாக் கடையை அகற்றினால் தான் செல்வோம் என அனைவரும் கூறினர்.

அதைத்தொடர்ந்து தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, வருகிற 31-ந்தேதி வரை டாஸ்மாக் கடை மூடப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் மதியம் 12 மணி வரை நீடித்தது.

பின்னர் பொதுமக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கே.ஆர்.நரேந்திரனிடம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஊராட்சி மன்றம் சார்பில் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்டு, இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தாசில்தார் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com