

பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்தவர்களில் ஜனார்த்தனரெட்டி முக்கியமானவர். ஆனால் சுரங்க முறைகேட்டில் அவர் சிக்கியதால் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கடந்த மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜனார்த்தனரெட்டி பிரசாரம் செய்ய பா.ஜனதா மேலிடம் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், பல்லாரியில் ரெட்டி சமுதாயம் சார்பில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் ஜனார்த்தனரெட்டியின் சகோதரரும், எம்.எல்.ஏ.வான சோமசேகர ரெட்டி கலந்துகொண்டு பேசும் போது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சிக்கு வரமுடியாமல் போனதற்கு ஜனார்த்தனரெட்டியை பா.ஜனதா புறக்கணித்ததே காரணம் என்று குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதுகுறித்து நேற்று சோமசேகர ரெட்டியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிகஇடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு ஜனார்த்தனரெட்டியை புறக்கணித்ததே காரணம் என்பது ரெட்டி சமுதாயத்தினர் மற்றும் பல்லாரி மாவட்ட மக்களின் கருத்தாகும். அது எனது சொந்த கருத்து அல்ல. மக்களின் கருத்தையே நான் கூறினேன். 2008-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கும், பல்லாரியில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறவும் ஜனார்த்தனரெட்டி காரணமாக இருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அவரை பா.ஜனதா புறக்கணித்து விட்டதாக மக்கள் கூறுகிறார்கள்.
அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனார்த்தனரெட்டியை புறக்கணிக்காமல், கட்சிக்குள் சேர்த்து கொள்வதுடன், தேர்தல் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று ரெட்டி சமுதாய மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். மக்களின் விருப்பத்தை கட்சி தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
இவ்வாறு சோமசேகர ரெட்டி கூறினார்.