

நாகர்கோவில்,
கடந்த மாதம் 30ந் தேதி வீசிய ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. புயலினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே இன்னும் தெரியாமல் இருக்கிறது.
இந்தநிலையில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு, சேதங்களை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களை சந்தித்து விவரங்கள் சேகரிக்கவும் நேற்று மத்திய குழுவினர் குமரி மாவட்டம் வந்தனர். மத்திய உள்துறை இணை செயலாளர் சஞ்சீவ்குமார் ஜிந்தால் தலைமையில் இந்தக்குழுவில் புதுடெல்லி கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வள ஆணையர் பால்பாண்டியன், மத்திய மின்துறை துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய கப்பல்துறை அதிகாரி பரமேஸ்வர் பாலி, மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இயக்குனர் மனோகரன் ஆகிய 5 பேர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் நேற்று காலை 10.30 மணியளவில் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர். அங்கு ஒகி புயலால் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, புயல் பாதிப்பு மற்றும் இழப்பீடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, புயல் பாதிப்பின் போது பல்வேறு துறைரீதியாக எடுக்கப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து படவிளக்க காட்சிகள் காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் சாய்குமார், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் கோபால், வேளாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பெடி, மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர், தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் ஒகி புயலினாலும், சென்னையில் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புவதற்காகவும், 8 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். அதில் 5 பேர் கேரள மாநிலத்திலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் ஏற்பட்ட பாதிப்புகள் பார்வையிட வந்துள்ளனர்.
சென்னை, புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டிணம் போன்ற பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட 3 பேர் கொண்ட குழுவினரும் சென்றுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ஒகி புயல் நிவாரண பணிக்காக மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புயலினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.376 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதில் வேளாண்மை, மின்சார துறை, ஊரக வளர்ச்சி, மாநிலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.
ஒகி புயலினால் கடலில் காணாமல் போனவர்களில் இதுவரை 220 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதில் 170 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
பிரதமர் மோடி குமரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்தபோது, 320 மீனவர்கள் மாயமாகி இருந்தார்கள். அவ்வாறு மாயமாகி இருந்தவர்கள் படிப்படியாக கரை திரும்ப தொடங்கியுள்ளனர். கடலில் மாயமான மீனவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் தினத்துக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காணாமல் போனவர்கள் அனைவரும் இன்னும் முழு அளவில் கரை திரும்பவில்லை. மீதமுள்ள மீனவர்களும் புத்தாண்டுக்குள் கரைக்கு வருவார்கள் என நம்பிக்கை உள்ளது.
காணாமல் போன மீனவர்களில் 13 படகுகளில் சென்ற 35 மீனவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இது கவலையளிக்க கூடியது. புயலினால் இறந்த மீனவர்கள் மற்றும் இழப்புகள், சேதங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யவே மத்திய குழு வருகை தந்துள்ளது. அவர்கள் தங்களது ஆய்வினை மத்திய அரசுக்கு அனுப்பி உரிய இழப்பீடும், நிவாரணமும் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட இழப்புகள், மீனவர்களின் கோரிக்கைகள், நிவாரணங்கள், சீரமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து வருகிற 3ந் தேதி சென்னையில் 5 பேர் கொண்ட குழுவினர் வருவாய்துறை அலுவலர், மீன்வளம், மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். இதையடுத்து கூடுதலாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரையில் புயல் பாதிப்புக்கு குமரி மாவட்டத்தில் 8 மீனவர்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த மீனவர்களை மரபணு சோதனை மூலம் அடையாளம் கண்டுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ. 84 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. மரம், மின்கம்பம் முறிந்து விழுந்தும், வீடு இடிந்து பலியானவர்களுக்கு அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு தொகை அறிவித்து இருந்தது. அந்த தொகையை தற்போது தமிழக அரசு ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து அதன்பின்பு முடிவு எடுக்கப்படும்.
மாயமான மீனவர்கள் இறந்ததாக அறிவிக்க 7 ஆண்டுகள் காத்திருக்கும் நிலைமையை மாற்றி 2 ஆண்டுகளாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய குழுவினர் ஆய்வுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
வாழை, ரப்பர், நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு இடுபொருள் மானியம் பெற பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு பேரிடர் காலங்களில் நேரடியாக மத்திய அரசின் மானியம் கிடைக்கும் வகையில் வசதிகள் உள்ளது.
குமரி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதற்கு மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய நாட்டில், நல உதவிகளை வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வேளாண் பயிர் காப்பீடு செய்வதில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்த காப்பீடு முழு அளவில் செயல்படுத்தப்படும் போது, ஒரு மேன்மையான இடத்துக்கு நமது நாடு வரும். ஆகவே, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம்.
படகு பதிவுகளில் உள்ள விதிமுறைகள் குறித்தும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை தரப்பட்டுள்ளது. பதிவு செய்யாத படகுகளில் மீன்பிடிக்க சென்று கடலில் மாயமான மீனவர்களின் விவரங்களும் இந்த ஆய்வின் போது பெறப்பட்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மற்ற மாநிலங்களில் வழங்குவதை விட சிறந்த முறையில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.