

தஞ்சாவூர்,
தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க தஞ்சை மாவட்ட அவசர கூட்டம் தலைவர் தங்கபிரபாகரன் தலைமையில் நடந்தது. துணை தாசில்தார் பரணிதரன், துணைத்தலைவர்கள் செந்தில்குமார், யுவராஜ், விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டசெயலாளர் தரும.கருணாநிதி வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வாக்காளர் சரிபார்ப்பு பணிக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரும் ஆன்ட்ராய்டு செல்போன் உபயோகப்படுத்தி வீடு, வீடாக சரிபார்க்க கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நிலையில் அவர்களுடைய படிப்பு மற்றும் வாங்கும் ஊதியம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் ஆங்கிலத்தில் உருவாக்கிய சாப்ட்வேரில் ஆன்ட்ராய்டு செல்போன் மூலமாக பணி பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே அனைவருக்கும் ஆன்ட்ராய்டு செல்போன் வழங்க வேண்டும். அதுவரை பணியாளர்களை அச்சுறுத்தக்கூடாது. மேலும் சாப்ட்வேர் மென்பொருள் தமிழில் வழங்க வேண்டும்.
மதிப்பூதியம்
தேர்தல் பணி பார்த்த பணியாளர்களுக்கு மதிப்பூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மாநில தேர்தல் ஆணையத்திடம் உரிய நிதியை பெற்று மதிப்பூதியத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். நேரடி நியமன உதவியாளர்களை பாதிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் நேரடி நியமன உதவியாளர்கள் 20 மாதங்க் கண்டிப்பாக பணி பார்க்க வேண்டும் என்ற விதி திருத்தத்தை மாற்றி அரசாணை வழங்கப்பட்டுள்ளதை உரிய முறையில் அரசிதழில் பதிவு செய்து நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் துணை தாசில்தார்கள் பாதிக்காத வகையில் தற்போதைய நிலை தொடர பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்ட தலைவர் சத்தியராஜ், மாவட்ட பிரசார செயலாளர்கள் மணிகண்டன், சேகர், மகளிர் அணி துணை செயலாளர்கள் செந்தமிழ்ச்செல்வி, மலர்க்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.