சேலத்தில் வியாபாரியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்

சேலத்தில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலத்தில் வியாபாரியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்
Published on

சேலம்,

சேலம் டவுன் ஜாமியா மசூதி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 40). இவர் சேலம் அ.ம.மு.க. கட்சியின் சிறுபான்மை பிரிவு இணை செயலாளராக உள்ளார். இவர் தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் முகமது அலி நேற்று காலை திருவள்ளுவர் சிலை அருகே வியாபாரத்திற்காக தள்ளுவண்டியில் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தார். இதனிடையே சேலம் போஸ் மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் தள்ளுவண்டியை சிறிது நேரம் சாலையோரத்தில் நிறுத்துமாறு முகமது அலியிடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தெரிவித்தார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அவரை சப்-இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தையால் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் முகமது அலியை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவருக்கு ஆதரவாக வந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த சப்-இன்ஸ்பெக்டர் அங்கிருந்து சென்று விட்டார். இதையறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com