பட்டுக்கோட்டையில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அவலம் பொதுமக்கள் அவதி

பட்டுக்கோட்டையில் 25 ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பட்டுக்கோட்டையில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அவலம் பொதுமக்கள் அவதி
Published on

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டத்தில் உள்ளது பட்டுக்கோட்டை நகராட்சி. இந்த நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் முன்பு 33-வது வார்டாகவும், தற்போது 18-வது வார்டாகவும் உள்ள வெட்டிக்காடு, கணபதிபுரம், மகாராஜசமுத்திரம் ஆறு பகுதி உள்ளது. இந்த 18-வது வார்டில் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு சுடுகாடு மகாராஜசமுத்திரம் ஆற்றின் கரை ஓரம் உள்ளது. இதற்கான சாலையின் இருபுறமும் வயல்வெளிகளை கடந்து சுடுகாட்டிற்கு செல்ல வேண்டும். இந்த சுடுகாட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு மட்டும் சாலை போடப்படாமல் உள்ளது.

சாலை வசதி இல்லாததால் அவதி

இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் துயர சம்பவங்கள் நடைபெறும் போது பிணத்தை எடுத்துச்செல்வதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதாவது சாலை இருக்கும் இடம் வரை பொதுமக்கள் பிணத்தை வாகனங்களில் எடுத்துச்சென்று விடுகின்றனர். சாலை வசதி இல்லாத பகுதிக்கு தூக்கிக்கொண்டு தான் செல்கிறார்கள்.

ஆனால் 200 மீட்டர் தூரமும் சாலை வசதி இல்லாதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சாதாரண நாட்களில் மக்கள் உடலை எளிதில் எடுத்துச்சென்று விடுகிறார்கள். ஆனால் மழைகாலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் மிகவும் சிரமப்படுகிறார்கள். உடலை அடக்கம் செய்வதற்கு தூக்கி செல்லும் போது முழங்கால் வரை சேற்றில் கால் பதிந்து விடுகிறது.

சீரமைக்க வேண்டும்

எனவே சுடுகாடு வரை இந்த சாலையை சீர் செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நகராட்சி பகுதி மட்டும் அல்லாது பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சா.வெட்டிக்காடு ஊராட்சியை சேர்ந்த 1000 குடும்பங்களும் இந்த சுடுகாட்டை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து ஆதிதிராவிடர் முன்னேற்றக்கழக தலைவர் சதா.சிவக்குமார் கூறுகையில், சுடுகாட்டிற்கு செல்லும் சாலை கடந்த 25 ஆண்டுகளாக மோசமாக உள்ளது. இந்த சாலையில் தான் மகாராஜசமுத்திரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலும் உள்ளது. இந்த வாய்க்காலில் தரைப்பாலம் கட்டுவதற்காக 10 அடி தூரம் வரை தார்சாலை போடப்படாமல் மண்சாலையாக கிடக்கிறது. அந்த சாலையும் சேறு, சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதே போல் சுடுகாடு அருகேயும் சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் மக்கள் மட்டும் அல்லாது, அந்த வழியாக செல்லும் விவசாயிகளும் மிகவும் சீரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்து தர வேண்டும்என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com