பப்ஜி விளையாட்டால் இணைந்த காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்

திருவட்டார் அருகே பப்ஜி விளையாட்டு மூலம் காதல் ஜோடி இணைந்தது. படிப்பை பாதியில் கைவிட்ட மாணவி, காதலனுடன் போலீசிடம் தஞ்சம் அடைந்தார்.
பப்ஜி விளையாட்டால் இணைந்த காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்
Published on

திருவட்டார்,

பப்ஜி விளையாட்டு மிகவும் பிரபலம். இளைஞர்கள் செல்போனில் அதிக நேரம் மூழ்கி இருப்பது, இந்த விளையாட்டில் தான். சில இளைஞர்கள் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி என்ன செய்கிறோம் என தெரியாமல் விபரீத முடிவை எடுத்த சோக சம்பவங்களும் நடந்துள்ளது. அதே சமயத்தில், பப்ஜி விளையாட்டு மூலம் ஒரு காதல் ஜோடி இணைந்துள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

படிப்பை பாதியில் கைவிட்ட பெண்

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் பொற்றவிளையை சேர்ந்தவர் சசிகுமார், மர வியாபாரி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் பபிஷா (வயது 20) திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தார். பின்னர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். இவருக்கு செல்போனில் பப்ஜி விளையாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. பெற்றோரும் மகள் ஏதோ விளையாட்டில் தான் ஆர்வமாக இருக்கிறாள் என்ற எண்ணத்தில் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.

ஆனால் பப்ஜி விளையாட்டு மூலம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் மகன் அஜின் பிரின்ஸ் (24) என்பவர் அவருக்கு அறிமுகம் ஆனார். பப்ஜி விளையாட்டில் அஜின் பிரின்ஸ், பபிஷாவுக்கு வழிகாட்டியாக இருந்தார். இதில் 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. மணிக்கணக்கில் இருவரும் செல்போன் மூலமாக பேசிக் கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பப்ஜி விளையாட்டுடன் இருவரும் காதலையும் சேர்த்து வளர்த்தனர்.

காதலனுடன் தஞ்சம்

இந்த காதல் விவகாரம் அவரவர் பெற்றோருக்கு தெரிய வந்தது. இந்த காதலுக்கு இருதரப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி திடீரென வீட்டை விட்டு பபிஷா வெளியேறி பப்ஜி காதலனுடன் சென்று விட்டார். தொடர்ந்து தனது மகளை காணவில்லை என்று திருவட்டார் போலீசில் பபிஷாவின் பெற்றோர் புகார் செய்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் காதல் ஜோடி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.

உடனே போலீசார், காதல் ஜோடியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அங்கு காதலர்களை பிரிப்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். ஆனால், காதலர்களோ சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். மேலும், இருவரும் மேஜர் என்பதால் ஜோடியை போலீசார் சேர்த்து வைத்து அனுப்பினர். பின்னர் அவர்கள் கோவிலில் மாலை மாற்றி திருமணமும் செய்து கொண்டனர். பப்ஜி விளையாட்டில் வழிகாட்டியாக இருந்தவரை, வாழ்க்கை துணையாக பெண் ஏற்றுக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com