பாகல்கோட்டை அருகே துயர சம்பவம்: வீட்டின் மேற்கூரை இடிந்து 11 மாத ஆண் குழந்தை சாவு - தாய் படுகாயம்

பாகல்கோட்டை அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த 11 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதில் படுகாயமடைந்த தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாகல்கோட்டை அருகே துயர சம்பவம்: வீட்டின் மேற்கூரை இடிந்து 11 மாத ஆண் குழந்தை சாவு - தாய் படுகாயம்
Published on

பாகல்கோட்டை,

பாகல்கோட்டை மாவட்டம் தேரதால் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது, தம்மடட்டி கிராமம். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாகல்கோட்டை உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தம்மடட்டி கிராமத்திலும் கனமழை பெய்து, வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்தவர் அஜ்ஜல புஜபாலி திம்மண்ணா. இவரது மனைவி அக்ஷதா. இந்த தம்பதிக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று அஜ்ஜல புஜபாலி திம்மண்ணா-அக்ஷதா தம்பதி, தங்களது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்களுடன் இன்னொருவரும் அதே வீட்டில் தூங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் அஜ்ஜலபுஜபாலி திம்மண்ணாவும், மற்றொருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். இதனால் அக்ஷதாவும், அவரது குழந்தையும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அதிகாலை 5 மணி அளவில் திடீரென்று வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை மற்றும் தாய் அக்ஷதா மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது. அக்ஷதா படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அக்ஷதாவை மீட்டு சிகிச்சைக்காக அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேரதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com