வாணாபுரம் அருகே கூரை வீடுகள் எரிந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

வாணாபுரம் அருகே 4 கூரை வீடுகள் எரிந்து நாசமானது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
வாணாபுரம் அருகே கூரை வீடுகள் எரிந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Published on

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே சதாகுப்பம் கிராமம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மாயவன் மகன் ஜெயவேல் (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணசாமி மகன்களான மதியழகன் (47), அண்ணாதுரை (55), மாரி (44). இவர்கள் அனைவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் மாரி என்பவரது கூரை வீட்டில் திடீரென தீ ஏற்பட்டது. காற்று வேகத்தால் மாரி வீட்டில் எரிந்து கொண்டிந்த தீ கொழுந்து விட்டு எரிந்து ஜெயவேல், மதியழகன், அண்ணாதுரை ஆகியோரின் வீட்டின் மீதும் பரவியது.

இதனால் 4 வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ், துணிகள், பாத்திரங்கள் போன்றவை எரிந்து நாசமானது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூரை வீடுகள் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் தண்டராம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் விசுவநாதன், கோபால் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தண்டராம்பட்டு தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து விட்டதால், தீயை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து செங்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

இதில் ஜெயவேலுக்கு சொந்தமான பீரோவில் இருந்த 1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 5 பவுன் நகை முற்றிலும் எரிந்து சேதமானது. அதேபோல் மதியழகன், அண்ணாதுரை, மாரி ஆகியோரின் வீடுகளில் இருந்த 12 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டமுருகபெருமான் மற்றும் வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

4 கூரைவீடுகளும் எரிந்து நாசமானதால் அந்த வீடுகளில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com