மும்பை–நெல்லை ரெயிலில் எஸ்–9 முன்பதிவு பெட்டி திடீர் அகற்றம்; பயணிகள் அதிர்ச்சி

மும்பை–நெல்லை ரெயிலில் எஸ்–9 முன்பதிவு பெட்டி அகற்றப்பட்டதால் மதுரை ரெயில் நிலையத்துக்கு படையெடுத்த பயணிகளின் உறவினர்களால் நேற்று சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை–நெல்லை ரெயிலில் எஸ்–9 முன்பதிவு பெட்டி திடீர் அகற்றம்; பயணிகள் அதிர்ச்சி
Published on

மதுரை,

மும்பையில் இருந்து மதுரை வழியாக தென்மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், கோவா வழியாக மதுரை வந்து நெல்லை செல்லும் தாதர்நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலும் உண்டு. இந்த ரெயில்(வ.எண்.11021) தாதர் ரெயில்நிலையத்தில் இருந்து செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு வியாழன், சனி, திங்கட்கிழமைகளில் காலை 8 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. நண்பகல் 11.45 மணிக்கு நெல்லை ரெயில்நிலையம் சென்றடைகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு தாதர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட எஸ்9 பெட்டி இணைக்கப்படவில்லை. இதனால், இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்திருந்து எஸ்9 பெட்டியில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மதுரை மற்றும் நெல்லையில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தகுந்த காரணங்களுக்காக பெட்டிகளை இணைக்காமல் இருப்பதற்கு ரெயில்வே விதிகளில் இடமுள்ளது. மேலும், இந்த விதி முன்பதிவு டிக்கெட்டுகளில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாகவும் பதிலளித்தனர். இதனால், பயணிகளும், அவர்களின் உறவினர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். நீண்டதூர பயணம் என்பதால் மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்ய முடியாமல் தவித்தனர். ஒரு சில பயணிகள் அதே டிக்கெட்டில் சாதாரண பெட்டிகளில் கூட்டநெரிசலில் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்துக்கு படையெடுத்த பயணிகளின் உறவினர்களால் நேற்று சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக இந்த ரெயிலில் ஒரு 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com