உப்பிடமங்கலம் சந்தையில் கால்நடைகள் விற்பனை செய்ய தடை கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

கோமாரியை நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் உப்பிடமங்கலம் சந்தையில் 4 வாரங்கள் கால்நடைகளை விற்பனை செய்ய தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உப்பிடமங்கலம் சந்தையில் கால்நடைகள் விற்பனை செய்ய தடை கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை
Published on

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தற்போது பருவமழை பெய்து வருவதாலும், பனிப்பொழிவு இருப்பதாலும் அண்டை மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டு கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன, நமது கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 15வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூலம் 1,86,550 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு கால்நடை சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மேற்படி மாவட்டங்களில் இருந்து, நோய் தாக்கம் ஏற்பட்டுள்ள கால்நடைகள், நமது கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிடமங்கலம் கால்நடை சந்தையில் விற்பனைக்கு வருவதன் மூலம், நோய் பரவிட வாய்ப்பு உள்ளது. எனவே கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடைகளையும் கோமாரி நோய் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் சட்டம் 2009-ன் படி, கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை தற்காலிகமாக 4 வார காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com