

ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே பூண்டி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர்களில் மணல் அள்ள அரசு தடை விதித்தது. இதனால் கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும், தி.மு.க., கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்கங்களும் இதற்காக அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இதுவரை வெள்ளாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மதகளிர்மாணிக்கம், எசனூர், குணமங்கலம், பூண்டி, கள்ளிப்பாடி, வல்லியம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று காலை 10 மணி அளவில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் முன்பு திரண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா விரைந்து வந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது கிராம மக்கள், மாட்டு வண்டி மணல் குவாரி குறித்து கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த வந்ததாக தெரிவித்தனர். அதற்கு இன்ஸ்பெக்டர், உரிய அனுமதியோ, முன்அறிவிப்போ இன்றி கூட்டம் நடத்தக் கூடாது என்று தெரிவித்தார்.இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் அந்தோணிராஜிடம், வெள்ளாற்றில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதைஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.