சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை

கொடிக்கம்பம் அகற்றப் பட்டதை கண்டித்து சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
Published on

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள ஆலத்தூர் காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பம் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற இருந்தது. இதற்காக கல்வெட்டு மற்றும் கொடிக்கம்பத்தை சுற்றிலும் கட்டைகள் கட்டி இருந்தனர். இந்த நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் சங்கராபுரம் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உரிய அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனை அகற்றினர்.

இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் தமிழ்மாறன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் தலித்சந்திரன், சிந்தனை வளவன், மாநில நிர்வாகிகள் கிள்ளிவளவன், பொன்னிவளவன், தொகுதி செயலாளர்கள் சிலம்பன், அம்பிகாபதி, மதியழகன், ஓவியரணி மாவட்ட அமைப்பாளர் தனசேகரன், முகாம் செயலாளர் மாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கொடிக்கம்பத்தை அமைக்க அனுமதி வழங்க கோரி, தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடேசனிடம் மனு அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com