

கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று உள்ளார். அந்த மாணவி பள்ளியில் திடீரென்று மயங்கி விழுந்து உள்ளார். உடனே அவரை ஆசிரியைகள் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவியை தஞ்சையில் உள்ள ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். அதைக் கேட்டதும் அந்த மாணவியை சிகிச்சைக்காக அழைத்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்த தகவல் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி, மருத்துவமனைக்கு விரைந்து வந்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கிடைத்த அதிர்ச்சியான தகவல்கள் வருமாறு:-
தஞ்சையில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் படித்து வரும் 17 வயது மாணவர் ஒருவரும், 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். அப்போது இருவரும் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். அப்போது அந்த மாணவர், பள்ளி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.