

மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி டிட்வாலா செல்லும் மின்சார ரெயிலில் போலீஸ்காரர் அனில் போப்லே என்பவர் ஏறினார். இருக்கையில் அமர சென்றபோது, அங்கிருந்த பயணி ஒருவர் அந்த இடத்தை தனது நண்பருக்காக பிடித்து வைத்திருப்பதாக கூறி அவரை இருக்க விடாமல் தடுத்தார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு உண்டானதில் பயணிகள் சிலர் போலீஸ்காரரை பிடித்து தாக்கி உள்ளனர். இதுகுறித்து போலீஸ்காரர் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார், போலீஸ்காரரை தாக்கிய பயணிகள் ரஷித் தானி, வாசிம் கான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் கோர்ட்டு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில், விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய செசன்ஸ் கோர்ட்டு, கீழ் கோர்ட்டு விதித்த ஒரு மாத ஜெயில் தண்டனையை ஒரு நாளாக குறைத்து தீர்ப்பு கூறியது. மேலும் இருவருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.