போலீஸ்நிலையம் அருகே ரகசியமாக விற்பனை நடந்த மதுக்கடை நொறுக்கப்பட்டன

போலீஸ்நிலையம் அருகே ரகசியமாக விற்பனை நடைபெற்ற மதுக்கடை மற்றும் மது பார் சூறையாடப்பட்டது.அங்கிருந்த மதுபாட்டில்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அடித்து நொறுக்கினர்.
போலீஸ்நிலையம் அருகே ரகசியமாக விற்பனை நடந்த மதுக்கடை நொறுக்கப்பட்டன
Published on

கோவை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடை மூடப்பட்டது. ஆனால் இந்த மதுக்கடையில் முன்பக்க கதவை மூடிவிட்டு பின்பக்கம் வழியாக ரகசியமாக மதுவிற்பனை நடைபெறுவதாகவும், நடவடிக்கை எடுக்குமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமின்போது, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்கள், தனியார் பாருக்கு வழங்கப்பட்டு அங்கிருந்தும் மதுவிற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது.

அடித்து உடைப்பு

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிங்காநல்லூர் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாதர் சங்கத்தை சேர்ந்த ஜோதிமணி மற்றும் பலர் திரண்டு வந்து மதுக்கடையின் ஷட்டரை அடித்து உடைத்து உள்ளே புகுந்தனர்.அங்குஇருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். பின்னர் மதுபாட்டில்கள் இருந்த அட்டைப்பெட்டிகளை தூக்கி வந்து நடுரோட்டில் போட்டு உடைத்தனர்.உடையாத பாட்டில்களை கம்புகளால் அடித்து நொறுக்கினார்கள். மேலும் அருகில் உள்ள பாரில் இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்த மதுக்கடை காவல்நிலையம் அருகே உள்ளது. முறைகேடாக மதுவிற்பனை நடைபெற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பின்பக்கம் வழியாக மதுவிற்பனை நடைபெற்றதுடன், பாருக்கும் மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது. புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தனர்.

போலீசில் புகார்

மேலும் சட்டவிரோதமாக மதுக்கடை செயல்பட அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும், கட்டிட உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிங்காநல்லூர் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மதுக்கடை சூறையாடப்பட்டது தொடர்பாக போலீசார் வீடியோ மூலம் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, பாரில் கள்ளத்தனமாக மதுவிற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுக்கடை மற்றும் பார் சூறையாடப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சிங்காநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com