

தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் கொய்மலர் மகத்துவ மையம் மற்றும் பயிற்சி மையம் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவுறும் தருவாயில் உள்ளது. இங்கு ரோஜா, கார்னேசன், ஜெர்பார் போன்ற கொய்மலர்கள் உற்பத்தி செய்வது மற்றும் அதுகுறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் திட்ட செயல்பாடுகளின் ஆய்விற்கு பின் மானாவாரி பயிர்களின் மகசூல் மற்றும் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு 7 வட்டாரங்களில் 15 குழுக்களில் மொத்தம் 15000 எக்டர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. என்றார்.
சுழற்கலப்பை
இதைத் தொடர்ந்து வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கலப்பை, ரூ.1.25 லட்சம் மதிப்பில் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை ககன்தீப் சிங் பேடி வழங்கினார்
இந்த ஆய்வின்போது வேளாண்மை பொறியியல் தலைமை பொறியாளர் தெய்வேந்திரன், தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் கணேசன், தோட்டக்கலை இணை இயக்குநர் கண்ணன், செயற்பொறியாளர் வேணுகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர் சீனிவாசன், விவசாய சங்க தலைவர் ராமகவுண்டர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.