அரக்கோணம் ரெயில் நிலைய அலுவலகத்தில் மீண்டும் பாம்பு புகுந்தது

அரக்கோணம் ரெயில் நிலைய அலுவலகத்துக்குள் மீண்டும் பாம்பு புகுந்தது. இதனால் தற்காலிகமாக ‘டிக்கெட் கவுண்ட்டர்’ மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
அரக்கோணம் ரெயில் நிலைய அலுவலகத்தில் மீண்டும் பாம்பு புகுந்தது
Published on

அரக்கோணம்,

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்காக ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் 6 கவுண்ட்டர்களும், அதன் அருகே முன்பதிவு செய்வதற்கான டிக்கெட் கவுண்ட்டரும் உள்ளது. இது மட்டுமில்லாமல் காஞ்சீபுரம் மற்றும் பழனிப்பேட்டை பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க பழனிப்பேட்டை பகுதியில் ஒரு டிக்கெட் கவுண்ட்டரும் உள்ளது.

நேற்று முன்தினம் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் காலை 6 மணிக்கு மாதிமங்களம் பகுதியை சேர்ந்த நிவேதிதா (வயது 23) என்பவர் பணியில் இருந்தார். பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி கொண்டிருந்த போது திடீரென டிக்கெட் கவுண்ட்டரில் 6 அடி நீளம் கொண்ட சாரைபாம்பு ஒன்று புகுந்தது. உடனே நிவேதிதா அலறியடித்து கொண்டு வெளியே வந்தார். இதனையடுத்து டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த பயணிகள் பாம்பை அடித்து கொன்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை புளியமங்கலம் பகுதியை சேர்ந்த மோகனபிரியா (23) என்பவர் பணிக்கு வந்தார். அப்போது தான் கொண்டு வந்த சாப்பாட்டு பையை அருகே இருந்த மேஜையில் வைத்துவிட்டு பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென மேஜையில் வைத்திருந்த சாப்பாடு பை கீழே விழுந்தது.

சாப்பாடு பை எப்படி விழுந்தது என்று மோகனபிரியா பார்த்த போது அருகில் இருந்த பிரிண்டரின் பின்பகுதியில் கொடிய விஷமுள்ள 6 அடி நீளமுள்ள கருநாகபாம்பு படம் எடுத்தப்படி எட்டி பார்த்தது. இதை பார்த்ததும் அவர் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து கதவை பூட்டிக்கொண்டார்.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு, அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு அலுவலர் பழனி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று டிக்கெட் கவுண்ட்டரில் உள்ள கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவற்றை வெளியே எடுத்து வைத்துவிட்டு, சுமார் 1 மணி நேரம் தேடி பார்த்தனர். ஆனால் பாம்பு எதுவும் இல்லை. பாம்பு சந்து, பொந்து வழியாகவோ அல்லது இரும்பு குழாய்கள் வழியாகவோ சென்று இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

பாம்பு இல்லை என்று உறுதிப்படுத்திய பின்னரும் கூட ரெயில்வே ஊழியர் உள்ளே சென்று டிக்கெட் கொடுக்க பயப்படும் நிலை உள்ளது. எனவே ரெயில்வே அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் காரணமாக பழனிப்பேட்டை டிக்கெட் கவுண்ட்டரை தற்காலிகமாக மூடி வைத்தனர்.

மேலும் அதற்கான அறிவிப்பை டிக்கெட் கவுண்ட்டர் முன்பாக ஒட்டி வைத்தனர். டிக்கெட் கவுண்ட்டர் திடீரென மூடப்பட்டதால் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர்.

இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com