கீரமங்கலத்தில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 7 மின்மோட்டார்கள் பறிமுதல்

கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் குடிநீரை உறிஞ்ச பயன் படுத்தப்பட்ட 7 மின்மோட்டார்களை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.
கீரமங்கலத்தில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 7 மின்மோட்டார்கள் பறிமுதல்
Published on

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில், பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடப்படும் குடிநீர் தெரு குழாய்களுக்கு வராமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தனி இணைப்பு பெற்றுள்ள பலரும் மின் மோட்டார்களை வைத்து குடிநீரை உறிஞ்சி எடுத்து குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி வீட்டு தோட்டங்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது. அதனால் தான் தெரு குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என்று பொதுமக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் நீண்ட தூரம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கீரமங்கலம் பேரூராட்சியில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் பழனிவேல் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் குடிநீரை உறிஞ்சி எடுத்த 7 மின் மோட்டார்களை பறி முதல் செய்தனர். மேலும் பிப்ரவரி 20-ந் தேதிக்குள் குடிநீரை உறிஞ்சி எடுக்க பயன் படுத்தப்படும் அனைத்து மின்மோட்டார்களும் பறிமுதல் செய்யப்படும். வெயில் காலம் தொடங்கிவிட்டது. நிலத்தடி நீர் மட்டம் குறையும் போது குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க மின் மோட்டார்களை வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதை பொதுமக்களே நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செயல் அலுவலர் கூறினார்.

இதேபோல கிராம ஊராட்சிகளிலும் குடிநீரை உறிஞ்சி எடுப்பதை தடுக்க மின்மோட்டார்களை பறிமுதல் செய்தால் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com