

மும்பை,
டவ்தே புயலால் மும்பை கடல் பகுதியில் எண்ணெய் கிணறு பணிகளில் ஈடுபட்டு வந்த கப்பலான பி-305 கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கடலில் மூழ்கி பலர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வலியுறுத்தின.
இந்தநிலையில் நேற்று மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலேயை பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான ஆசிஷ் செலார் அகில பாரதிய நாவிக் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது.
பி-305 கப்பல் கேப்டன் ராகேஷ் பல்லவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான பதிவு செய்யப்பட்ட வழக்கில் உண்மையில்லை. ஒட்டு மொத்த சம்பவத்திற்கும் கேப்டனை மட்டும் எப்படி பொறுப்பாளி ஆக்க முடியும்?. ஒப்பந்த நிறுவனம் தான் இந்த சம்பவத்திற்கு ஒட்டு மொத்த பொறுப்பாகும். பொறுப்பில் இருந்து அந்த நிறுவனம் தப்பி ஓட முயற்சி செய்வது போல தெரிகிறது.
பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய நிறுவனத்தின் மீது தான் கொலை அல்லாத மரணத்தை விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மராட்டிய அரசு மற்றும் போலீசார் ஏன் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களை பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.