ஆட்டோ டிரைவர் கொலைக்கு காங்கிரஸ் பிரமுகரை பழிக்குப்பழி வாங்கினர் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஆட்டோ டிரைவர் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க சபதம் எடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரை கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆட்டோ டிரைவர் கொலைக்கு காங்கிரஸ் பிரமுகரை பழிக்குப்பழி வாங்கினர் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). கதர்வாரிய துணை தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமிநாராயணனின் தீவிர ஆதரவாளர் ஆவார். கடந்த 7-ந்தேதி மாலை துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பியபோது வாழைக்குளம் என்ற இடத்தில் அவரை பின்தொடர்ந்த கும்பல் கட்டையால் தாக்கி அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கணேசன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் துப்பு துலக்கியதில், வாழைக்குளத்தை சேர்ந்த வெங்கடேசன், அரவிந்த், வைத்திக்குப்பத்தை சேர்ந்த கட்ட செந்தில், அங்காளம்மன் நகரை சேர்ந்த அஜய் உள்பட சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்களில் 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

பழி தீர்க்க சபதம்

இதில் கடந்த 2018-ம் ஆண்டு ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக கணேசன் கொலை செய்யப்பட்டு இருப்பது அம்பலமானது. கடந்த மாதம் நாகராஜின் 2-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கணேசனை பழிவாங்குவது என சபதம் எடுத்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

நாகராஜின் உறவினரான கட்ட செந்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கணேசனை தீர்த்துக்கட்டி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கட்ட செந்தில் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்காக அவர்கள் கதிர்காமம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனை முடிவு வந்ததும் அவர்களை சிறையில் அடைக்க முத்தியால்பேட்டை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

உடல் தகனம்

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கணேசனின் உடல் சின்னையாபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கண்ணன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் அவரது உடல் கருவடிக்குப்பம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com