மண் பானையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குறியீடு கண்டுபிடிப்பு

திண்டுக்கல் அருகே குளத்துக்குள் கிடந்த மண் பானையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குறியீடு கண்டுபிடிக்கபட்டது.
மண் பானையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குறியீடு கண்டுபிடிப்பு
Published on

பழனி,

திண்டுக்கல் அருகே மேலப்பாடியூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் கரையோர பகுதியில் சங்ககால தமிழ் மக்கள் பயன்படுத்திய கல்வட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த குளத்தை அதே பகுதியை சேர்ந்த வரலாற்று ஆய்வு மாணவர் வீரகருப்பையா என்பவர் ஆய்வுக்காக தோண்டினார். அப்போது குளத்தில் ஒரு மண் பானை புதைந்து இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

உடனே அவர் இதுகுறித்து பழனி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்திக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நாராயணமூர்த்தி, பழனியாண்டவர் கலைக்கல்லூரி பண்பாட்டுத்துறை பேராசிரியர்கள் அசோகன், மனோகரன் ஆகியோர் மேலப்பாடியூர் கிராமத்துக்கு சென்று அந்த பானையை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:-

சங்க கால தமிழ் மக்கள், ஒரு பானையில் இறந்தவர்களின் உடலை வைத்து அந்த குளப்பகுதியில் புதைகுழி ஏற்படுத்தி புதைத்துள்ளனர். ஆனால் அந்த பானையை முதுமக்கள் தாழி என்று கூற முடியாது. இந்த பானை கி.மு. 1 முதல் கி.மு.6-ம் நூற்றாண்டுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் அந்த காலகட்டத்தில் தான் பானையின் மீது சில குறியீடுகளை பொறிக்கும் பழக்கம் இருந்துள்ளதற்கான வரலாற்று சான்று உள்ளது.

இந்த பானையின் கழுத்து பகுதியில் படுக்கை வசமாக ஒரு கோடு போடப்பட்டுள்ளது. அதன் மேல் செங்குத்தாக 8 கோடுகள் வரையப்பட்டுள்ளன. 8-வது கோட்டில் மட்டும் இசட் வடிவில் குறுக்காக கோடுகள் வரையப்பட்டுள்ளன. அந்த கோடுகள் இறந்தவருக்கு 7 முறை மறுபிறப்பு உள்ளது என்றும் 8-வது பிறப்பு இல்லை என்பதை தெரிவிக்கும் விதமாக உள்ளது. இதன் மூலம், இதுவரை இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே அறியப்பட்டு வந்த மறுபிறப்பு மற்றும் ஏழு பிறப்பு என்ற நம்பிக்கைக்கு நேரடியான சான்றாக இந்த பானை கிடைத்துள்ளது.

திருப்பாவையில் வாரணம் ஆயிரம்... என தொடங்கும் பாடலின் இடையில் இம்மைக்கும் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏழ் பிறவிக்கும் என்பது நமக்கு ஏழு பிறவிகள் உள்ளது என்பதை குறிக்கிறது. எனவே கி.மு. 1-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஏழு பிறப்பு பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com