பரிகாரம் செய்வதாக கூறி தம்பதியிடம் 2½ பவுன் நகை ‘அபேஸ்’ - ஜோதிடர் கைது

தேனியில், பரிகாரம் செய்வதாக கூறி தம்பதியிடம் 2½ பவுன் சங்கிலியை ‘அபேஸ்’ செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பரிகாரம் செய்வதாக கூறி தம்பதியிடம் 2½ பவுன் நகை ‘அபேஸ்’ - ஜோதிடர் கைது
Published on

தேனி,

தேனி கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கத்தேவர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 51). கூலித்தொழிலாளி. கடந்த 23-ந்தேதி இவர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது அந்த வழியாக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த முத்து (30) என்பவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி சென்றார். அவர், மனோகரன் வீட்டின் முன்பு நின்று கொண்டு தீய சக்தி உள்ளதாகவும், அதனால் கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து அந்த ஜோதிடரிடம் மனோகரன் பேச்சுக்கொடுத்தார். அப்போது முத்து, வீட்டில் கஷ்டம் தீர்வதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறினார். இதை மனோகரன் நம்பி, முத்துவை வீட்டுக்குள் அழைத்தார். பின்னர் முத்து, வீட்டில் பரிகார பூஜை செய்தார். அப்போது புளியை உருண்டையாக உருட்டி, அதற்குள் தங்க நகையை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று முத்து கூறியுள்ளார்.

இதை மனோகரன் நம்பி, தனது மனைவியின் 2 பவுன் சங்கிலியை கொடுத்துள்ளார். இதையடுத்து முத்து, நகையை புளி உருண்டைக்குள் வைப்பது போல் உருண்டை பிடித்து, ஒரு சொம்பில் போட்டுள்ளார்.

பின்னர் பரிகார பூஜை முடித்துவிட்டு முத்து சென்று விட்டார். அதன்பிறகு சொம்பில் இருந்த புளி உருண்டைக்குள் பார்த்தபோது நகை இல்லை. பூஜை செய்வதாக கூறி, நகையை முத்து அபேஸ் செய்தது தெரியவந்தது. இதனால், ஜோதிடர் முத்து குறித்து மனோகரன் விசாரித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மனோகரன் தனது மனைவியுடன் தேனி பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ஜோதிடர் முத்து பஸ்சுக்காக காத்திருந்தார். உடனே அவரை மனோகரனும், அவரது மனைவியும் சேர்ந்து மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் அபேஸ் செய்த நகையை முத்து தனது கழுத்தில் அணிந்து இருந்தார். உடனே அவர்கள் முத்துவை, தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து மனோகரன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி வழக்குப்பதிவு செய்து, முத்துவை கைது செய்தார். அவர் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com