

பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு விவகாரத்தில் கலபுரகியில் போலீஸ்காரரின் மகனை சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் போலீஸ் துறையில் காலியாக இருந்த 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்தனர். மேலும் முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான எழுத்து தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
போலீஸ்காரர் மகன் கைது
இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் நடந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக கலபுரகியை சேர்ந்த வீரேஷ் என்பவரை சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகாவை சேர்ந்தவர் தான் வீரேஷ். இவரது தந்தை சேடம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பு 3 முறை சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை வீரேஷ் எழுதி இருந்தார். அந்த தேர்வு களில் அவர் தோல்வி அடைந்திருந்தார். அவருக்கு வயது அதிகரித்து கொண்டே சென்றதால், இந்த முறை எப்படியாவது சப்-இன்ஸ்பெக்டராகி விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சில அதிகாரிகள் உதவியுடன் அவர் தேர்வு எழுதியதாக தெரிகிறது. வெறும் 20 கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்திருந்த வீரேஷ் 121 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதன்மூலம் அவர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது முதற்கட்டமாக தெரியவந்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேட்டுக்கு பின்னால் சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்வு நடைபெற்ற அறைகளில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.