பசுமை வழிச்சாலை குறித்து மாநில அரசு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

பசுமை வழிச்சாலை குறித்து மாநில அரசு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
பசுமை வழிச்சாலை குறித்து மாநில அரசு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
Published on

தூத்துக்குடி,

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வாகைகுளம் வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் தென் தமிழக மக்கள் அதிக அளவு பயன்பெறுவர். மருத்துவ தலைநகரமாக மதுரை மாற இருக்கிறது. இன்று இன்னொரு முக்கியமான தினம் சரக்கு மற்றும் சேவைவரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்து ஒரு வருடம் ஆகிறது. மிகப்பெரிய பொருளாதார புரட்சியை ஜி.எஸ்.டி. உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம் வசூலிக்கப்படும் தொகை ரூ.13 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.12 லட்சம் கோடியை விட அதிகம். நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்படுகிறது.

சென்னை- சேலம் இடையே பசுமை வழிச்சாலை பற்றி விழிப்புணர்வு தேவை. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். அதே நேரத்தில் பசுமை வழிச்சாலை தமிழகத்துக்கு மிகுந்த பலன் தரும். பசுமை வழிச்சாலை பற்றிய விழிப்புணர்வு முகாம்களை மாநில அரசு நடத்த வேண்டும். தூத்துக்குடி கலவரம் மக்களால் நடத்தப்பட்டது அல்ல. மக்கள் மட்டுமே அந்த போராட்டத்தில் பங்கேற்று இருந்தால் கலவரம் வெடித்து இருக்காது. மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பினர் தங்களை மூளைச்சலவை செய்தனர் என்று மக்களே தெரிவித்து உள்ளனர்.

இதனைத்தான் முதலில் இருந்தே நாங்கள் கூறி வந்தோம். தூத்துக்குடி போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து இருப்பதாக கருத்து தெரிவித்தவர்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்தன. இன்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

பா.ஜனதா கட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர்கள் என்று கூறுகிறார்கள். ரூ.57 கோடி ஹஜ் மானியம் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி நக்வி தெரிவித்து உள்ளார். காவிரி தொடர்பாக கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி உள்ளார்கள்.

இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். காவிரி நிறைவடைந்த பிரச்சினை. மத்திய அரசை பொறுத்தவரை நிறைவான தீர்வை நோக்கி காவிரி நகர்ந்து கொண்டு இருக்கிறது. மறுபடியும் கர்நாடகாவில் காவிரி அரசியல் ஆகி உள்ளது. அதனை நாம் அரசியல் ஆக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com