மாநிலங்களை பிச்சை பாத்திரத்தை ஏந்த வைத்துவிட்டது - மத்திய அரசு மீது குமாரசாமி காட்டம்

மாநிலங்களை பிச்சை பாத்திரம் ஏந்த வைத்துவிட்டது என்று மத்திய அரசை குமாரசாமி கடுமையாக சாடியுள்ளார்.
மாநிலங்களை பிச்சை பாத்திரத்தை ஏந்த வைத்துவிட்டது - மத்திய அரசு மீது குமாரசாமி காட்டம்
Published on

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் ஆத்மநிர்பர்பாரத் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த நெருக்கடி நிலையை பயன்படுத்தி கொண்டு பா.ஜனதா அரசியல் செய்கிறது. நாட்டு மக்கள் தன்னிறைவு அடைய வேண்டும் என்று கூறி மத்திய அரசு மக்களை அனாதையாக விட்டுள்ளது.

ஊரடங்கால் தத்தளித்து கொண்டிருக்கும் விவசாயிகள், பொதுமக்களுக்கு உதவ மத்திய அரசு எதையும் அறிவிக்கவில்லை.

தொழில் நிறுவனங்களை பாதுகாக்கவே திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெறும் அறிவிப்புகள், கற்பனைகள் மூலம் ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு என்று கூறி காகித அரண்மனையை மத்திய அரசு கட்டியுள்ளது.

நெருக்கடி நிலை

இந்த அறிவிப்புகள் மூலம் பா.ஜனதாவுக்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது. இந்த நெருக்கடியை பா.ஜனதா அரசியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும்.

ஆனால் ரூ.20 லட்சம் கோடி கொடுப்பதாக மத்திய அரசு சொல்கிறது. மத்திய அரசு மாநிலங்களை பிச்சை பாத்திரத்துடன் நிற்க வைத்துள்ளது. ரூ.20 லட்சம் கோடி என்பது பண ரீதியிலான திட்டங்கள் இல்லை. இதனால் மக்களுக்கு குறைந்தபட்ச உதவி கூட கிடைக்காது. இதன் பயன், தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

நீங்களே தன்னிறைவு...

மத்திய அரசின் இந்த ஆத்மநிர்பர்பாரத் திட்டம் என்பது, நீங்களே தன்னிறைவு அடைய வேண்டும், எங்களிடம் இருந்து உங்களுக்கு ஒரு பைசா காசு கூட கிடைக்காது என்பதை மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com