நீராவி அழுத்தம் குறைந்ததால் மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்கப்பட்ட மலைரெயிலில் நீராவி அழுத்தம் குறைந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் 1¾ மணி நேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.
நீராவி அழுத்தம் குறைந்ததால் மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது
Published on

குன்னூர்,

நீலகிரி மலைரெயில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பாரம்பரிய ரெயிலாக இருந்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் 4 பெட்டிகளுடன் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 5 பெட்டிகளுடன் டீசல் என்ஜின் மூலம் இயக்கப் படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செங்குத்தான மலைப்பாதை என்பதால் ரெயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி நீராவி என்ஜின் புதிய தொழில்நுட்பம் மூலம் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜினாக மாற்றப்பட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலைரெயில் இயக்கப்படுகிறது.

பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் மலைரெயில் அடிக்கடி உந்துசக்தி குறைந்து தாமதமாக ரெயில் நிலையங்களுக்கு புறப்பட்டு செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் நடுவழியில் காத்து கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் மலைரெயில் என்ஜினை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.15 மணிக்கு வழக்கம்போல் மலைரெயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் குன்னூர்-கல்லார் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்த போது என்ஜினை இயக்குவதற்கு தேவையான அழுத்தம் குறைந்தது. இதனை தொடர்ந்து மலை ரெயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் நீராவி ஏற்றப்பட்டு மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல் பல்வேறு இடங்களில் உந்து சக்தி குறைந்ததால் மலைரெயில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.

குன்னூருக்கு காலை 10.15 மணிக்கு வரவேண்டிய மலைரெயில் 1 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 12 மணிக்கு வந்தடைந்தது. அதன்பின்னர் ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நூற்றாண்டு பழமை வாய்ந்த மலைரெயில் என்ஜினை சீரமைத்து அதனை சுற்றுலா ரெயிலாக இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் அந்த என்ஜினை கோவையில் காட்சிபொருளாக ரெயில்வே அதிகாரிகள் வைத்துவிட்டனர்.

என்ஜின்களை காட்சிபொருளாக வைக்க ஆர்வம் காட்டும் ரெயில்வே நிர்வாகம் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜினை பராமரிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் நீலகிரி மலைரெயிலை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பாரம்பரிய மிக்க ரெயிலை நிறுத்தாமல் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com