ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதை தவிர்க்க அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்
Published on

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி பெய்த கனமழையால் ஆண்டிமடம், கூவத்தூர், விளந்தை, அண்ணங்காரன் குப்பம், சிலுவைச்சேரி பகுதிகளில் உள்ள குளம், ஏரிகள் உடைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் புகுந்தது.

ஆண்டிமடம் வட்டாரத்தில் 750 எக்டேர் பரப்பளவில் நெற்பயிரும், 300 எக்டேர் பரப்பளவில் உளுந்து பயிரும், 300 ஏக்கர் பரப்பளவில் மணிலா பயிர்களையும் வெள்ளநீர் சூழ்ந்ததால், விவசாயிகள் வேதனையடைந்தனர்.

சந்தையை சூழ்ந்த மழைநீர்

இந்நிலையில் சமீப நாட்களாக பெய்து வரும் கன மழையால் ஆண்டிமடம், விளந்தை, ஸ்ரீமுஷ்ணம் ரோடு, காடுவெட்டி ரோடு, அண்ணங்காரகுப்பம், கவரப்பாளையம், ஜெயங்கொண்டம் ரோடு, சந்தை தோப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக விளந்தை மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

ஆண்டிமடம்-ஸ்ரீமுஷ்ணம் செல்லும் சாலை குறவன்குட்டை அருகே வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழைநீர் தார் சாலையில் குளம்போல் தேங்கி காட்சி அளிப்பது வாடிக்கையாக உள்ளது. தெருக்களிலும், சாலையோரங்களிலும் குளம்போல் மழைநீர் தேங்குவதை தடுக்க வடிகால் வாய்க்கால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

கரும்பு வியாபாரம் பாதிப்பு

இதுகுறித்து விளந்தை புதுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கரும்பு வியாபாரி கலியபெருமாள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மழை பெய்தது. அதேபோல் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மார்கழி மாத இறுதியில் இதுபோன்ற மழையை எனது அனுபவத்தில் நான் பார்த்தது கிடையாது. பொங்கலை முன்னிட்டு கரும்பு வியாபாரம் மழையால் மிகவும் மந்தமாக காணப்படுகிறது, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com