காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க.வினர் அல்வா கொடுக்கும் போராட்டம்

பக்கோடா விற்கும் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க.வினர் அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க.வினர் அல்வா கொடுக்கும் போராட்டம்
Published on

புதுச்சேரி,

முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் கடன் பெறுவோர் பக்கோடா விற்று கூட பிழைப்பு நடத்தலாம் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்து இருந்தார். மோடியின் இந்த கருத்திற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேருவீதி, காந்திவீதி சந்திப்பில் கடந்த 7-ந்தேதி பக்கோடா விற்கும் போராட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நேற்று காலை காந்திவீதி, நேருவீதி சந்திப்பில் நடந்தது. நாராயணசாமி அல்வா கடை என்ற பெயரில் கடை திறந்து முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உருவ முகமூடி படத்தை மாட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தனர்.

போராட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் தங்க விக்ரமன், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாவட்ட தலைவர்கள் மூர்த்தி, சிவானந்தம், மோகன் கமல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அந்த பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அல்வா கொடுத்தனர்.

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் நேற்று சுதேசி மில் அருகே பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பிரதாப் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பிரதேச தலைவர் சரவணன், நிர்வாகிகள் சாரதி, நவீன், ஜனார்த்தனன், தன்ராஜ், இந்திய மாணவர் சங்க தலைவர் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com