பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும் என திருவாரூரில் ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும்
Published on

திருவாரூர்,

திருவாரூரில் ஆசிரியர்-அரசு அலுவலர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்ட விளக்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சிவகுரு ஆகியோர் தலைமை தாங்கினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற முன்னாள் முதன்மை மேலாளர் சுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானதம்பி, மாவட்ட தலைவர் பைரவநாதன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வீரமணி, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட துணைத்தலைவர் பாரதிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு அலுவலர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி ஊதியக்குழு அறிக்கையினை அரசு சமர்ப்பித்துள்ளது. இதற்கு கோர்ட்டிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

வருகிற 13-ந் தேதிக்குள் ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். 23-ந் தேதி கோர்ட்டில் ஆசிரியர்-அரசு ஊழியர் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து வலியுறுத்துவோம். நிச்சயம் கோர்ட்டு மூலம் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com