‘ராகிங்’ கலாசாரத்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிந்து கிடக்கிறது - மாவட்ட முதன்மை நீதிபதி

‘ராகிங்’ கலாசாரத்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிந்து கிடக்கிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி கூறினார்.
‘ராகிங்’ கலாசாரத்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிந்து கிடக்கிறது - மாவட்ட முதன்மை நீதிபதி
Published on

போளூர்,

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, போளூர் சட்டப்பணிகள் குழு சார்பில் செழியன் கல்வியியல் கல்லூரியில் ராகிங் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. போளூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகன்நாதன், மாஜிஸ்திரேட்டு தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மகிழேந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

ராகிங் என்பது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரபலம். இந்த வார்த்தை கேட்டு மிரளாத மாணவர்களே இல்லை. அந்த அளவுக்கு ராகிங் கலாசாரத்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிந்து கிடக்கிறது. ஏறக்குறைய அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த ராகிங் கொடுமையில் இருந்து எப்படியாவது தப்பித்துவிட மாட்டோமா என்று எண்ணுகின்றனர். ஆனால் பலருக்கு அதில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் தெரிவதில்லை.

ராகிங் என்றால் என்ன மற்றும் அவற்றில் இருந்து தப்பிக்க எங்கே உதவி நாடலாம் என்பதை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ராகிங் என்பது மனம் மற்றும் உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்தல், வாய்மொழி பேசி தொந்தரவு கொடுத்தல், தவறாக நடந்து கொள்ளுதல், அச்சுறுத்தும் ரீதியல் மிரட்டுதல், பொருளாதார ரீதியாக சுரண்டுதல் போன்ற இத்தகைய செயல்களே பொதுவாக ராகிங் நடவடிக்கைகளாக கொள்ளப்படுகின்றன.

இதை செய்வதால் கிடைக்கும் தண்டனை கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுதல், கல்லூரி விடுதி மற்றும் உணவகத்துக்கு செல்ல தடை செய்யப்படுதல், சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் கல்வி உதவித்தொகையை திரும்பப் பெறுதல், தேர்வு எழுதுவதில் இருந்து தடை செய்தல், வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர முடியாமல் தடை செய்தல், கிரிமினல் குற்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாதல் என பல வித தண்டனைகள் ராகிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் எதிர் காலமே முற்றிலும் பாழாகலாம். இந்த வகையில் தண்டிக்கப்பட்டால் நீதிமன்றங்களின் மூலம் தப்பிக்க நினைத்தாலும் அது மிகவும் கடினம் என்பதை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து புகாரை 1800 180 5522 அல்லது 155222 ஆகிய எண்களில் இலவசமாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் வக்கீல் பாலாஜி, வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com