

சென்னை,
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். சரியாக படிக்கவில்லை என்று அவரது தந்தையும், கல்லூரி பேராசிரியர்களும் திட்டியதால், அவர் இந்த முடிவை எடுத்தார் என்று முதலில் கூறப்பட்டது.
இதுகுறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அந்த மாணவி வயிற்றில் 3 மாத கரு இருந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மாணவியின் வீட்டிற்கு எதிரே திருணமாகி குடும்பத்துடன் வசிக்கும் திராவிட மணி என்பவர், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து திராவிட மணி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த காரைக்கால் கூடுதல் செசன்சு கோர்ட்டு, 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை திராவிட மணிக்கு வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திராவிட மணி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் என அனைத்துமே மாணவியின் தற்கொலை முடிவிற்கு திராவிடமணி தான் காரணம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை உறுதி செய்து காரைக்கால் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு சரியானது. எனவே, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு அளித்துள்ளார்.