உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த மாணவி

முருகப்பெருமானுக்கு காணிக்கை செலுத்துவதற்காக உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக பள்ளி மாணவி கொடுத்தார். தனது தந்தையுடன் திண்டுக்கல் வந்த மாணவி கலெக்டரிடம் அந்த பணத்தை வழங்கினார்.
உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த மாணவி
Published on

திண்டுக்கல்:

பள்ளி மாணவி

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த எஸ்.வாடிப்பட்டி காளியம்மன் நகரை சேர்ந்தவர் கண்ணன். வாடகை கார் டிரைவர்.

இவருடைய மகள் சண்முகவள்ளி (வயது 11). இவள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறாள்.

இந்த மாணவி தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தனது தந்தையுடன் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தாள்.

பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தான் கலெக்டரை சந்திக்க வேண்டும் என்றும், அவரிடம் கொரோனா நிவாரண நிதிக்காக தான் சேமித்த உண்டியல் பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் கூறினாள்.

இதையடுத்து அவளை கலெக்டர் அறை முன்புள்ள காத்திருப்போர் அறைக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

பின்னர் அங்குள்ள இருக்கையில் மாணவியை அமர வைத்த அதிகாரிகள், கலெக்டர் விஜயலட்சுமியிடம் சென்று மாணவியின் விருப்பம் குறித்து தெரிவித்தனர்.

காணிக்கை செலுத்துவதற்காக...

உடனே அந்த மாணவியை அழைத்து வரும்படி கலெக்டர், அதிகாரிகளிடம் கூறினார்.

இதையடுத்து மாணவி கலெக்டரிடம் அழைத்துச்செல்லப்பட்டாள்.

பின்னர் கலெக்டரிடம் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை மாணவி சண்முகவள்ளி கொடுத்தாள்.

அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதில் உள்ள பணத்தை கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியுடன் சேர்த்துவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் தான் சேமித்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரணத்துக்காக கொடுத்த மாணவியை கலெக்டர் பாராட்டினார்.

இதையடுத்து மாணவி கொடுத்த உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து அதிகாரிகள் எண்ணினர்.

அதில் ரூ.1,444 இருந்தது. பின்னர் அந்த தொகை கொரோனா நிவாரண நிதியுடன் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவி சண்முகவள்ளியிடம் கேட்ட போது, தந்தை எனது செலவுக்கு கொடுக்கும் பணத்தை திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு காணிக்கை செலுத்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வந்தேன்.

இந்த நிலையில் கொரோனாவால் மக்கள் படும் துயரங்களை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து மிகுந்த வேதனையடைந்தேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

அப்போது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொழில் நிறுவனத்தினர் கொரோனா நிவாரண நிதி வழங்குவதை பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன்.

எனவே எனது உண்டியலில் சேமித்த பணத்தையும் அதற்காக கொடுத்தேன் என்றாள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com