

மதுரை,
மதுரை வள்ளுவர் காலனியை சேர்ந்த மாணவி சுபிக்ஷா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஆன்லைனில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தபோது ஓ.பி.சி. என்பதற்கு பதிலாக தவறுதலாக ஒதுக்கீடு அல்லாத பிரிவை தேர்வு செய்து விட்டேன். நீட்தேர்வில் 108 மதிப்பெண் பெற்றதால் கவுன்சிலிங்கிற்கு தகுதி பெற்றுள்ளேன். ஆனால், இட ஒதுக்கீடு அல்லாத பிரிவை தேர்வு செய்ததால் ஓ.பி.சி. பிரிவில் எனது பெயர் வெளியாகவில்லை. அறியாமல் நடந்த தவறை மன்னித்து ஓ.பி.சி. பிரிவில் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், மனுதாரரிடம் உரிய ஆவணங்களை பெற்று ஓ.பி.சி. பிரிவில் அனுமதிப்பது குறித்து மாணவர் தேர்வுக்கான மருத்துவ கல்வி இயக்குனர் பரிசீலித்து தகுந்த முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.