

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ளது கே.பெருமாள்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவருடைய மகன் கவின்குமார் (வயது 11). இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் மாணவன் ஊருக்கு அருகில் உள்ள கண்மாயில் குளிக்கச் சென்றான். அப்போது அங்கு 3 மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மாணவனை பார்த்ததும், கேலி செய்து சேற்றை வாரி வீசினராம்.
இதை மாணவன் கவின்குமார் கண்டித்ததோடு, அவர்களை திட்டினான். அதில் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் மாணவனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். அதில் மாணவன் இறந்தான்.
இது தெரிந்ததும் 3 பேரும் மாணவனின் உடலை கண்மாய் தண்ணீரில் தூக்கி போட்டு விட்டு சென்றனர்.
இந்தநிலையில் குளிக்கச் சென்ற மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் கண்மாய்க்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது கண்மாயில் கவின்குமார் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவனின் தந்தை உத்தப்பநாயக்கனுர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் உத்தப்பநாயக்கனுர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.