புதுச்சேரியில் அதிரடி: பஸ் கட்டணம் திடீர் உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

புதுச்சேரியில் நகரப்பகுதியில் ஓடும் அரசு பஸ்களுக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
புதுச்சேரியில் அதிரடி: பஸ் கட்டணம் திடீர் உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
Published on

புதுச்சேரி,

தமிழக அரசு பஸ்களின் கட்டணங்களை உயர்த்தி கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் எதிரொலியாக புதுச்சேரியிலும் புதிய பஸ் கட்டணங்களை நிர்ணயம் செய்து புதுவை அரசு போக்குவரத்து துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு புதுச்சேரி ஆட்சிப்பரப்பில் இயக்கப்படும் பஸ் கட்டணமானது அரசின் ஆணைப்படி திருத்தி அமைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதிஅன்று பஸ் கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தினார்கள். அதையடுத்து அரசு உயர்த்தி அறிவிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை வாபஸ் பெற்றது.

இந்த நிலையில் புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் குமார் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் நகர்புற, புறநகர மற்றும் சிற்றுந்துகளில் பணிபுரியும் கண்டக்டர்களுக்கு தெரிவிக்கப்படுவது என்னவென்றால் புதுவை அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

எனவே 22.6.2018 (நேற்று) நள்ளிரவு முதல் புதிய கட்டணத்தை வசூலிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுவை யூனியன் பிரதேசத்திற்குள் இயக்கப்படும் நகர சேவை பஸ்களுக்கு (டவுன் பஸ்கள்) தற்போது வசூலிக்கும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.10-ல் இருந்து ரூ.14 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com